Monday 25 February 2013

போகப் போகத் தெரியும் - 40





   கடவுள் காற்று காலம் இவை மூன்றுமே கண்களுக்குத் தெரியாமல் வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் விசயங்கள்.
   கடவுளுக்கு நாம் விரும்பிய உருவம் ஒன்றும் பலவும் உள்ளன. மனிதனுக்கு அவனிடம் கேட்டது கிடைத்து விட்டால் கடவுள் செயல் என நினைத்து மகிழ்கிறான். கிடைக்கவில்லை என்றால் விதியின் பெயரில் பழியைப் போடுகிறான். ஆதலால் அவனுக்கு ஏதோ ஒன்று தேவை என்றாலும் இல்லை என்றாலும் கடவுள் வேண்டும்.
   ஆனால் காற்று கொஞ்சம் வித்தியாசமாக.. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துக்குமே தேவையானது. கடவுளே இல்லை எனச் சொல்லும் நாத்தீகர்களுக்கும் கூட உயிர் வாழக் காற்று அவசியம்! மூடப்பட்ட இடத்தில் கூடக் காற்று அடைப்பட்டு இருக்கிறது.
   ஆனால் காலம்..?
   இதை எவரால் பிடித்து அடைத்துவைத்து விட முடியும்? இன்றிருப்பவர் நாளையில்லை! ஆனால் நாள் என்பது எப்பொழுதுமே உண்டு! அது வந்து கொண்டே இருக்கும். அதே சமயம் போய்க் கொண்டேயும் இருக்கும்.
   இந்த ஒரு நாளை நான் பிடித்து வைத்திருக்கிறேன் என்று எவராலும் சொல்லிவிட முடியாது. நடந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கலாம். நடந்து முடிந்தவைகள் அனைத்துமே ஞாபகார்த்தங்கள் தான்!
   இங்கே பறந்து கொண்டிருக்கும் காலத்திற்குத் தான் எத்தனைக் கால்கள்! அழகாக அசிங்கமாக அற்புதமாக கோரமாக இன்பமாக துன்பமாக.. எத்தனை எத்தனைக் காட்சிகள்!!
   இவையனைத்தும் காலத்தின் கட்டாயத்தால் உருவாகி மறைந்தன தான் என்றாலும் மனித மனங்கள் கூடவா மாறிப் போய்விடும்?
   ஏன் எல்லாரும் இப்படி மாறிப்போய் இருக்கிறார்கள்?
   மீனாவின் மனம் இதையெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்ததால்.. தொலைக்காட்சியில் ஓடிய காட்சிகள் மனத்தில் பதியவில்லை. அந்தத் திரைப்படத்தில் கதாநாயகன் இராமன் வேடமிட்டு கொண்டு எதிரிகளைத் துப்பாக்கியால் சுட்டு சாகடிக்கிறான்.
   என்ன மோசமான காட்சி? ஸ்ரீ இராம அவதாரத்திற்கு யுத்த காண்டத்திற்கே பெருவிளக்க நூல்கள் பெரிது பெரிதாக இருக்க.. எவ்வளவு சாதாரணமாக எதிரிகளைச் சுட்டுத் தள்ளுகிறான்?
   துப்பாக்கியால் சுட்டு சாகடிப்பது வீரமா..? இந்தக் காட்சிக்கு ஸ்ரீ இராம அவதாரக் காட்சி தேவையா..?
   மீனா வெறுப்புடன் தொலைக்காட்சியை நிறுத்தினாள். கடவுளின் கையில் துப்பாக்கியை இந்தக் காலத்தில் கொடுத்து மாற்றியிருக்கும் பொழுது சாதாரண மனிதர்கள் மாறுவது தவறா..?
   கையில் கிடைத்த புத்தகத்திலும் மனம் பதியவில்லை. மனம் வெறுமையாகிப் போனது போல் இருந்தது. ஏன் இந்த வெறுமை? வெறுப்பு?
   தான் நினைத்தது மனிதர்களுக்கு கிடைக்கவில்லை என்றால்.. வெறுப்பும் வேதனையும் தான் பரிசாகக் கிடைக்குமா?
   ஊர் கொண்டு இழுக்காத தேர் இரயில் வண்டி! அதன் நிலையத்தில் வந்து நின்ற போது தேர் ஊர்வலம் போல் இருந்த கூட்டத்தில் ஒருவர் கூட அவளுக்காக வந்தவர் இல்லை!
   ஏமாற்றம்! ஏற்கனவே சேகரிடம் இத்தனை மணிக்கு இந்த இரயிலில் வருவதாகத் தொலைபேசியில் இரயில் நிலையத்தில் பேசிவிட்டுத் தான் கிளம்பினாள். ஆனால் வரவேற்க யாரும் வரவில்லை!
   வாடகை வண்டியில் வந்திறங்கியதும் கமலா 'வாம்மா.. நல்லாயிருக்கியா..?" என்று கேட்டாள் முகத்தைக் கூட நேருக்கு நேர் பார்க்காமல். அகிலாண்டேசுவரி 'பிரயாணம் சௌகர்யமா இருந்துச்சா..?" என்றார். கூடவே 'போயி குளிச்சிட்டுச் சாப்பிடு" என்றொரு வார்த்தை.
   அவளுக்குப் பிரயாண கலைப்பு இருந்தாலும்.. அனைவரிடமும் பேசவேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. முக்கியமாகத் தன் கணவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. சாப்பிடும் பொழுது கமலாவிடம் கேட்டாள்.
   'தம்பி பெங்களூர் போயிருக்கு. நீ வரப்போறதா சேகர் டெலிபோன்ல சொன்னான். அநேகமா இன்னிக்கி இல்லன்னா நாளைக்கி வந்துடும்." கமலாவின் பேச்சில் சுரத்தை இல்லை. எழுதி வைத்துப் படிப்பது போல் தான் இருந்தது.
   சேகர் வந்தான். 'எப்டி இருக்கிற மீனா..?" நண்பர்கள் அனைவரும் அவளை பெயர்விட்டுத்தான் கூப்பிட வேண்டும் என்பது அவளது கட்டளை!
   'ம்.. இருக்கிறேன்."
   'காலையில முக்கியமா வெளிய போவவேண்டி இருந்துச்சி. அதான் ஸ்டேஷனுக்கு வரமுடியல."
   'பரவாயில்ல சேகர்." என்றாள். அவளுக்குத் தெரியும். அவன் வரமுடியவில்லை யென்றாலும் வேற யாரையாவது அனுப்பியிருக்கலாம். அல்லது வண்டியாவது அனுப்பி இருக்கலாம் என்பது.
   'சேகர்.. நம்ப பிரென்ஸயெல்லாம் எப்ப பாக்கலாம்? வீக்கெண்டுக்கு வருவாங்களா..? "
   அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
   'ம்.. வருவாங்க. வர்ற வெள்ளி கெழம ருக்மணிக்கி கல்யாணம். அதுக்கு வருவாங்க."
   'கல்யாணமா அப்போ நிச்சயம் வருவாங்கத்தான். மாப்புள்ள எப்டி இருக்காரு..? கல்யாணக் கல வந்துடுச்சா..?" முகம் முழுவதும் பல்லாகக் கேட்டாள். அவள் கண்முன் சரவணன் வந்து சிரித்தான்.
   'மீனா எனக்கு அவசரமா ஒரு வேல இருக்குது. நா அப்பறமா வந்து பாக்கறேன்;" அவள் கூப்பிடக் கூப்பிடக் காதில் விழாதவனாக வெளியேறினான்.
   மீனா யோசித்துக் கொண்டே வெளியே போகச் செருப்பை அணிந்தாள்.
   'மீனா இப்ப எங்கையும் வெளிய போவ வேணாம்." அகிலாண்டேசுவரி அதிகாரமாகச் சொன்னாள்.
   'ஏன்..? சும்மாத்தானே இருக்கேன். போயி ருக்மணிய பாத்துட்டு வந்துடுறேன்."
   'அதெல்லாம் இப்போ வேணாம். வெயில் தாழ போ. குளிர் தேசத்துல இருந்து வந்திருக்க. அப்புறம் சட்டுன்னு உடம்பு வீணாபோயிடும். உள்ள போயி வேற ஏதாவது வேல இருந்தா பாரு. இல்ல டி வி பாரு." என்றார். இதென்ன அன்பா? அதிகாரமா? புரிந்தது கொள்ள முடியாத உணர்ச்சி அவர் முகத்தில்!
   தொலைக்காட்சியை உயிர்பித்து விட்டு அமர்ந்துவிட்டாள். மேற்கே செல்ல இன்று சூரியனுக்கு மனம் வரவில்லை போலும். புது மனைவியைப் பிரிந்து செல்ல முடியாதக் கணவனைப் போல ஏக்கத்துடன் அனல் மூச்சைக் கக்கிக் கொண்டு மெதுவாகப் போனான்.
   மீனா தெருவில் இறங்கி நடந்தாள். அனல் காற்று முகத்தை எரித்தது. தூரத்தில் ஊர் கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் மொண்டு கொண்டிருந்தாள். அவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.. ஆமாம். அவளே தான்! ராதிகா. லட்சுமணனின் மனைவி. என்ன இங்க இருக்கிறள்..? அம்மா வீட்டிற்கு வந்திருப்பாளோ..? இருக்கலாம்.
   மீனாவைப் பார்த்துவிட்ட ராதிகா.. அவசர அவசரமாகக் குடத்தை நிரப்பிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.
   ஏன் இப்படி..? என்று யோசிக்கும் பொழுதே தண்ணீர் எடுக்க மூன்று பெண்கள் குடத்துடன் வர.. அதில் ஒருத்தி ருக்மணி! மீனா ருக்மணியைப் பார்த்து புன்னகைத்தாள்.
   ருக்மணியும் சிரித்தாள். ஆனால் அதில் நிறையச் சோகம் ஒட்டியிருந்தது. ருக்மணியின் கையைப் பிடித்து அருகில் நிற்க வைத்தாள். ருக்மணி குனிந்து கொண்டாள்.
   'என்ன கல்யாண பொண்ணு.. வெக்கமா..? என்ன எத்தன முற கேலி பண்ணியிருக்கிற? இப்போ என்னோட நேரம்! சொல்லு. மாப்ள எப்டி இருக்கார்? இப்பவாவது  பேசறது உண்டா? இல்ல மொதோ மாதிரியே கண்ஜாட மட்டுந்தானா..?"
   'ப்ச்சு.. அதெல்லாம் ஒன்னும் கெடையாது மீனா.." குரல் மெதுவாக வந்தது.
   'ஏன்.. விரதமா..? கல்யாணம் ஆவுற வரைக்கும் பாக்கக்கூடாது. பேசக் கூடாதுன்னு நேந்துகிட்டியா..?" கன்னத்தில் குத்தினாள்.
   'நேந்துகிட்டா மட்டும் நெனச்சதெல்லாம் கெடச்சிடுதா..? எதுக்குமே குடுப்பன வேணும் மீனா. நா கொடுத்து வக்காதவ. இப்போதைக்கி அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்."
   அவளுடன் வந்த பெண்கள் நிரப்பிவைத்த குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு நடந்தாள்.

   மீனா யோசனையில் முழ்கினாள். என்ன இப்படி பேசுகிறாள்? ஒரு சமயம் மாப்பிள்ளை அவள் விரும்பின சரவணன் இல்லையா..? வேற யாராவதா..? இருக்க முடியாது. அவர்கள் இருவரும் விரும்பியது ஊரறிந்த ரகசியம். சரவணனும் ருக்மணியை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டான். இருக்காது. அவர்களுக்குள் சண்டை என்று வந்தால் கூட அவர்களை இணைத்து வைக்கம் பொறுப்பு சக்திவேலிடம் இருக்கிறது. ஏன்..? மாதவன் ருக்மணியின் அண்ணன் தான். அவனுக்கும் அவன் தங்கை சரவணனை விரும்பியது தெரிந்து தான் இருந்தது.
   எப்படி பார்த்தாலும் மாப்பிள்ளை சரவணனைத் தவிர வேற யாராவது இருக்க முடியாது. சரவணனும் ஏமார்ந்தவன் கிடையாது. ஏதாவது இருவருக்கும் ஊடலாக இருக்கும். ஊடல் இல்லாத காதலா..?
   'அம்மா மீனாச்சி.. தம்பி வந்திடுச்சி. உன்னைய வூட்டுக்கு வரச்சொன்னாரு.."
   ஓர் ஆள் மீனாவிடம் கத்திச் சொல்லிவிட்டுச் சென்றார். இவளுக்குச் சட்டென்று உடல் சிலிர்த்தது. எழுந்து ஆவலுடன் வீட்டை நோக்கி ஓடினாள். அவன் தனிமையில் இருப்பான்.. அவனிடம் முதலில் என்ன பேசுவது..? எதைக் கேட்பது..? மனம் படபடப்பாக அடித்து கொண்டது.
   சக்திவேல் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான். அவனருகில் சேகர் இன்னும் இரண்டு ஊர்க்காரர்கள்! பால் போல் பொங்கிய மனம் நீர்விட்டது போல் அடங்கியது. மீனா அவன் முன் போய் நின்றாள்.
   அவன் பார்வையில் பட்டதும் கண்களில் அதிர்ச்சி. பதியாக இளைத்த உடல். கண்கள் உள்ளே போய் கன்னங்கள் ஒட்டி போய்.. என்ன ஆயிற்று இவருக்கு..?
   'சக்திவேல்.." என்று தொடங்கியவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். 'என்ன இப்படி எலச்சி போயிட்டீங்க..? ஒடம்பு சரியில்லையா..? "
   'இல்ல மீனா.. ஒடம்பு சரியாத்தான் இருக்கு. ஆமா.. நீ எப்டி இருக்க..? எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணியிருக்கியா..? பாஸாயிடுவ இல்ல..?" குரலில் முன்பிருந்தக் கம்பீரம் இல்லை.
   'ம்.. அதெல்லாம் நல்லா பண்ணியிருக்கேன். ஆனா உங்க எல்லாருக்கும் என்ன ஆச்சி..? ஏன் எல்லாரும் டல்லா இருக்கீங்க..?"
   அவன் பதில் தேடுமுன் அவனின் கைபேசி சிணுங்கியது. அநேகமாகப் பெங்களூரிலிருந்து வந்த அழைப்பாக இருக்கும். கன்னடத்தில் பேசினான்.
   மீனா மற்றவர்களைப் பார்த்தாள். அவள் தங்களைப் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் மற்றவர்கள் வேறு எதையோ பார்த்தார்கள்!
   பேசிமுடித்து போனை வைத்தச் சக்திவேல் நிமிர்ந்து அமர்ந்தான். குரலைக் கணைத்துக் கொண்டான்.
   'மீனா.. நீ விரும்பின மாதிறி பி எஸ் சி கம்பியூட்டர் சைன்சு முடிச்சிட்ட. மேல எம் பி ஏ பண்ணு. எங்க பண்ணப்போற? அதே காலேஜுல போதுமா..? வேற காலேஜுல அட்மிஷன் வாங்கட்டுமா..?"
   மீனா அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் பேப்பர் வெய்ட்டை வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தான். மற்றவர்களைப் பார்த்தாள். அவர்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். வந்த கண்ணீரை அவசரப்பட்டுச் சிரமப்பட்டு அடக்கினாள். எழுந்து நின்றாள்.
   'இதோ பாருங்க. நா இங்க இருக்கிறது உங்களுக்கெல்லாம் புடிக்கலன்னா டைரக்டா சொல்லிடுங்க. படிப்ப காரணம் காட்டி என்ன வெலக்கி வைக்கலாம்ன்னு நெனைக்காதீங்க. எம்மேல அன்பு காட்டலன்னாலும் பரவாயில்ல. அன்பாயிருக்கிற மாதிரி நடிக்காதீங்க."
   கண்களில் அவளையும் மீறிவந்த கண்ணீரைத் துடைத்து கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.
   சக்திவேல் இறுக்கம் தளராமல் அமர்ந்திருந்தான்.
   'என்னண்ணா.. அவகிட்ட விசயத்த சொல்லிட வேண்டியது தானே..?" சேகர் கேட்டான்.
   'ஏன்.. காலையில இருந்து நீ இங்க தான இருந்த? நீ சொல்லி இருக்கலாம்ல்ல?"
   அவன் பேசாமல் நின்றான்.
   'சேகர் அவளே தெரிஞ்சிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டும். இந்த விசயத்த தெரியப் படுத்துற தைரியம் எனக்குக் கெடையாது. அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்."
   குரல் உடைந்து வந்தது.

                            (தொடரும்)

1 comment :

  1. என்னங்க தோழி, அநியாயத்துக்கு அதிர்ச்சியும் எதிர்ப்பார்ப்பும் வைக்கிறீங்க?

    உங்களுடைய வருணனைகள் என்னை அந்த காட்சியைக் கண் முன்னே காட்டுகிறது. சொற்களை கையாண்டுள்ள விதம் மிகவும் அற்புதம்...

    ReplyDelete