Wednesday 27 February 2013

போகப் போகத் தெரியும் - 41






   மழையில் நனைந்த தாமரை மலராக மீனா குளியலறையைவிட்டு வெளியில் வந்தாள். உள் பாவாடையைத் தூக்கி மார்புக்கு மேல் கட்டிக் கொண்டு கையிலிருந்தத் துண்டால் கூந்தலை முடிந்து விட்டுக் கதவில் தொங்கிக் கொண்டிருந்தப் புடவை ஜாக்கெட் மற்றம் உள்ளாடையைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடையில்லாத நிலவு வெட்கத்துடன் மேகத்தில் மறைவது போல் சக்திவேலின் அறைக்குள் நுழைந்தாள்.
   குளிர்ந்த நீரில் குளித்ததால் உடல் மட்டுமல்லாமல் மனமும் உற்சாகத்துடன் இருந்தது. ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டே கதவை மூடி தாளிட்டாள். குளிர் சாதனம் பொருத்தப்பட்ட அறை சில்லென்று காற்று பட்டதும் உடல் சிலிர்த்தது. கையிலிருந்த துணிகளைக் கட்டிலில் போட்டுவிட்டுக் கண்ணாடி முன் வந்து நின்றாள்;.
   அவளுக்கே அவளுடலை அரைக்குரை ஆடையுடன் பார்ப்பது வெட்கமாக இருந்தது. இது என்ன இது? தன் உருவத்திற்கு அருகில் இன்னொறு உருவம்..?
   சட்டென்று திரும்பினாள். புன்சிரிப்புடன் சக்திவேல் நின்று கொண்டிருந்தான்! இவரெப்படி இங்கே..? இந்த நேரத்தில்..?
   நிச்சயமாக மாடிக்கு யாரும் வரமாட்டார்கள் என்பது நன்றாகத் தெரியும். சக்திவேலுவும் இந்த நேரத்தில் நிச்சயம் வீட்டில் இருக்கமாட்டான் என்பதும் தெரியும். அதனால் தான் பூந்துகள்களாக விழும் ஷவரில் குளிக்கலாம் என்ற ஆசையில் மாடிக்கு வந்தாள்.
   ஆனால் இவனைக் கொஞ்சமும் அவள் எதிர் பார்க்கவில்லை. எப்படி எப்போது வந்திருப்பான்? அவனிடம் கேட்கப் பயம். இது அவனுடைய அறை. என்ன செய்வது? அசடாகப் பார்த்தாள்!
   அவன் கண்களில் ஆசையுடன் ஏக்கப் பார்வை உடலை ஊடுருவிப் பார்த்தது. அருகில் இருந்த புடவையைக் கையில் எடுத்தாள்.
   'நா பொடவ கட்டணும். நீங்க கொஞ்சம் வெளியில போங்க." மெதுவாகச் சொன்னாள்.
   'நா போவணுமா..?" கையிலிருந்த ஃபைலை மேசையின் மீது வைத்துவிட்டு அவளருகில் வந்தான். கண்களில் ஏக்கம். அவனின் பார்வை புரிந்தவளாக 'நா போறேன்." என்று சொல்லிவிட்டு நகரப் போனவளைச் சட்டென்று பிடித்திழுத்து மார்போடு அணைத்தான்.
   கைகள் அவளுடலைத் தழுவ.. அவனுடைய மூச்சுக்காற்று கழுத்தில் சூடாகப் பட்டது. மீனா மரம் போல் நின்றிருந்தாள். அவனது உதடுகள் இவளுதடுகளைத் தேட முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
   ஏக்கத்துடன் 'என்ன மீனா..?" என்றான்.
   'நமக்குள்ள இதெல்லாம் வேண்டாங்க."
   'நமக்குள்ள வேணாம்ன்னா எப்டி..? இதெல்லாம் வேற எங்க போயி தேட முடியும்.? " அவளை மேலும் இறுக்கினான்.
   'ஏன் இதுக்கெல்லாம் அந்த பெங்களூர்காரி நிருஜா இருக்காளே.. அவப் போதாதா உங்களுக்கு..?"
   அவள் சொன்னது தான் தாமதம். சட்டென்று நெருப்பைத் தெட்டவன் போல விலக்கினான்.
   'என்ன சொன்ன நீ..?" புரியாமல் கெட்டான்.
   'புரியாத மாதிரி நடிக்காதீங்க. எனக்கு எல்லாம் தெரியும்." அலட்சியமாகச் சொன்னாள்.
   'என்ன எல்லாம் தெரியும்.? என்னன்னு தெரிஞ்சி வச்சிருக்கிற நீ நிருஜாவ பத்தி..?"
   'சரியாத்தான் புரிஞ்சிக்கினு இருக்கேன். நீங்க அவள விரும்பி இருக்கிறீங்க. ஊருக்காக நீங்க என்னை கல்யாணம் பண்ணினாலும் உங்களால அவள மறக்க முடியல. அதனால தான் என்ன வெளியூருக்கு அனுப்பிட்டு எந்த நேரமும் அவக்கூடவே இருக்கிறீங்க. பரவாயில்ல. என்னால உங்க மனச புரிஞ்சிக்க முடியுது. நா உங்க மனசுக்குத் தடையா இருக்கமாட்டேன். நீங்க எப்படி வேணா இருங்க."
   'சீ வாய மூடு. நிருஜா என்னோட பெஸ்ட் பிரண்டு. அவளுக்குக் கல்யாணம் ஆயி ஒரு கொழந்த கூட இருக்குது."
   'கல்யாணம் ஆன பொண்ணையா உங்களால பாக்காம இருக்க முடியல?"
   அவள் அப்படி சொல்ல கன்னம் எரிந்தது அவன் விட்ட அறையில்! கன்னத்தில் கைவைத்து கொண்டாள்.
   'ஏன் உங்களுக்கு இவ்ளோ கோவம்? உண்ம தெரிஞ்சி போச்சேன்னா..?"
   'மீனா.." அவன் கத்திய வேகத்தில் அடங்கினாள்.
   'வேணா. இதுக்கு மேல பேசாத. ஏற்கனவே நா ரொம்ப நொந்து போயிருக்கிறேன். என்ன மேல மேல சீண்டாத. எனக்கு நிருஜாத்தான் வேணும்ன்னா.. உன்ன எதுக்காக இவ்வளவு எதிர்ப்பு இருந்தும் கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும்? எதுக்காக உன்ன பிரிஞ்சி கஷ்டப்படணும்?"
   'ஐயோ.. ரொம்ப கஷ்டப்பட்டீங்களே..! அதனால தான் வந்த அன்னைக்கே.. எப்போ திரும்பிப் போறன்னு கேட்டீங்களா..? இல்ல.. தோ மூனு நாளா நானும் வீட்டுல தான இருக்கறேன். ஒரு வார்த்த அன்பா பேசி இருப்பீங்களா..? ஏதோ இன்னைக்கி தற்செயலா அரகொர டிhரஸ்சுல பாத்துட்டதால எங்கிட்ட வந்தீங்க. இத வச்சி நீங்க எம்மேல அன்பா இருக்கிறீங்கன்னா நெனச்சிட முடியும்? வேண்டாங்க இந்த நடிப்பு. நானே இங்கிருந்து கூடிய சீக்கிரம் போயிடுறேன். நீங்க நிம்மதியா இருங்க."
   மீனா வார்த்தையால் நெருப்பைக் கக்கினாள். அவனுக்குச் சுட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே வெந்து போய் இருந்த உள்ளம். வேதனையில் துடித்தது.
   'வேணாம்மா.. நீ இந்த மாதிரியெல்லாம் பேசாத. ஏற்கனவே நா எழந்தது போதும். இப்போ உன்னையும் எழந்துடுவேனோன்னு பயமா இருக்குது. அதுக்குத்தான் நீ மேல படிக்கப்போன்னு சொன்னேன். வேற எந்தக் காரணமும் கெடையாது." என்றான். குரல் உடைந்து இருந்தது. அழுகையின் சாயல் குரலில். கண்கள் கலங்கிவிட்டிருந்தன!
   மீனா இது போல் அவனை எந்த நேரத்திலும் பார்த்தது கிடையாது! எதற்காக இப்படி பேசுகிறான்? எதை இழந்தான்? யாரை இழந்தான்? புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையில் கேள்வி இருந்தது. ஆனால் அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
   'இதுக்கு மேல என்ன ஏதையும் கேக்காதம்மா. உனக்குப் பதில் சொல்லுற சக்தி எனக்கு கெடையாது." சொல்லிவிட்டு அவளைத் தாண்டி நடந்தான்.
   மீனா ஒன்றும் விளங்காதவளாக நின்றிருந்தாள். அவன் பேசியதில் எதுவோ ஒன்று இருக்கிறது. என்ன..? மனது கணக்குப் போட அவசர அவசரமாக ஆடையை உடுத்திக் கொண்டு கீழிறங்கி வந்தாள்.
   சோபாவில் சக்திவேல் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தான். அவனிடம் வந்தவள் அதிகாரமாகக் கேட்டாள். 'சொல்லுங்க..? என்ன நடந்துச்சி..? எங்கிட்ட எதையும் மறைக்காதீங்க."
   நிமிர்ந்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவளுக்கு இதயம் வேகமாக அடித்து கொண்டது. ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது. என்ன அது?
   சேகரிடம் வந்தாள். 'என்ன நடந்துச்சி..?" அழுத்தமாகக் கேட்டாள்.
   'அது வந்து மீனா.." தயங்கினான். எச்சிலை கூட்டி விழுங்கினான்.
   'சொல்லு"
   'நம்ம மாதவனையும் சரவணனையும் தேனப்பன் ஆளுங்க அடிச்சி.. அடிச்சி.."
   'அடிச்சி.."
   'சாகடிச்சிட்டாங்க மீனா.." அழுகையை அடக்க வாயில் கையை வைத்து கொண்டான்.
   'சாகடிச்சிட்டாங்களா..?" மீனா உடலில் ஓடிய இரத்தம் முழுவதும் உச்சந் தலைக்கு ஏற..  மயங்கிச் சரிந்தாள்.

                            (தொடரும்)

Monday 25 February 2013

போகப் போகத் தெரியும் - 40





   கடவுள் காற்று காலம் இவை மூன்றுமே கண்களுக்குத் தெரியாமல் வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் விசயங்கள்.
   கடவுளுக்கு நாம் விரும்பிய உருவம் ஒன்றும் பலவும் உள்ளன. மனிதனுக்கு அவனிடம் கேட்டது கிடைத்து விட்டால் கடவுள் செயல் என நினைத்து மகிழ்கிறான். கிடைக்கவில்லை என்றால் விதியின் பெயரில் பழியைப் போடுகிறான். ஆதலால் அவனுக்கு ஏதோ ஒன்று தேவை என்றாலும் இல்லை என்றாலும் கடவுள் வேண்டும்.
   ஆனால் காற்று கொஞ்சம் வித்தியாசமாக.. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துக்குமே தேவையானது. கடவுளே இல்லை எனச் சொல்லும் நாத்தீகர்களுக்கும் கூட உயிர் வாழக் காற்று அவசியம்! மூடப்பட்ட இடத்தில் கூடக் காற்று அடைப்பட்டு இருக்கிறது.
   ஆனால் காலம்..?
   இதை எவரால் பிடித்து அடைத்துவைத்து விட முடியும்? இன்றிருப்பவர் நாளையில்லை! ஆனால் நாள் என்பது எப்பொழுதுமே உண்டு! அது வந்து கொண்டே இருக்கும். அதே சமயம் போய்க் கொண்டேயும் இருக்கும்.
   இந்த ஒரு நாளை நான் பிடித்து வைத்திருக்கிறேன் என்று எவராலும் சொல்லிவிட முடியாது. நடந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கலாம். நடந்து முடிந்தவைகள் அனைத்துமே ஞாபகார்த்தங்கள் தான்!
   இங்கே பறந்து கொண்டிருக்கும் காலத்திற்குத் தான் எத்தனைக் கால்கள்! அழகாக அசிங்கமாக அற்புதமாக கோரமாக இன்பமாக துன்பமாக.. எத்தனை எத்தனைக் காட்சிகள்!!
   இவையனைத்தும் காலத்தின் கட்டாயத்தால் உருவாகி மறைந்தன தான் என்றாலும் மனித மனங்கள் கூடவா மாறிப் போய்விடும்?
   ஏன் எல்லாரும் இப்படி மாறிப்போய் இருக்கிறார்கள்?
   மீனாவின் மனம் இதையெல்லாம் எண்ணிக்கொண்டு இருந்ததால்.. தொலைக்காட்சியில் ஓடிய காட்சிகள் மனத்தில் பதியவில்லை. அந்தத் திரைப்படத்தில் கதாநாயகன் இராமன் வேடமிட்டு கொண்டு எதிரிகளைத் துப்பாக்கியால் சுட்டு சாகடிக்கிறான்.
   என்ன மோசமான காட்சி? ஸ்ரீ இராம அவதாரத்திற்கு யுத்த காண்டத்திற்கே பெருவிளக்க நூல்கள் பெரிது பெரிதாக இருக்க.. எவ்வளவு சாதாரணமாக எதிரிகளைச் சுட்டுத் தள்ளுகிறான்?
   துப்பாக்கியால் சுட்டு சாகடிப்பது வீரமா..? இந்தக் காட்சிக்கு ஸ்ரீ இராம அவதாரக் காட்சி தேவையா..?
   மீனா வெறுப்புடன் தொலைக்காட்சியை நிறுத்தினாள். கடவுளின் கையில் துப்பாக்கியை இந்தக் காலத்தில் கொடுத்து மாற்றியிருக்கும் பொழுது சாதாரண மனிதர்கள் மாறுவது தவறா..?
   கையில் கிடைத்த புத்தகத்திலும் மனம் பதியவில்லை. மனம் வெறுமையாகிப் போனது போல் இருந்தது. ஏன் இந்த வெறுமை? வெறுப்பு?
   தான் நினைத்தது மனிதர்களுக்கு கிடைக்கவில்லை என்றால்.. வெறுப்பும் வேதனையும் தான் பரிசாகக் கிடைக்குமா?
   ஊர் கொண்டு இழுக்காத தேர் இரயில் வண்டி! அதன் நிலையத்தில் வந்து நின்ற போது தேர் ஊர்வலம் போல் இருந்த கூட்டத்தில் ஒருவர் கூட அவளுக்காக வந்தவர் இல்லை!
   ஏமாற்றம்! ஏற்கனவே சேகரிடம் இத்தனை மணிக்கு இந்த இரயிலில் வருவதாகத் தொலைபேசியில் இரயில் நிலையத்தில் பேசிவிட்டுத் தான் கிளம்பினாள். ஆனால் வரவேற்க யாரும் வரவில்லை!
   வாடகை வண்டியில் வந்திறங்கியதும் கமலா 'வாம்மா.. நல்லாயிருக்கியா..?" என்று கேட்டாள் முகத்தைக் கூட நேருக்கு நேர் பார்க்காமல். அகிலாண்டேசுவரி 'பிரயாணம் சௌகர்யமா இருந்துச்சா..?" என்றார். கூடவே 'போயி குளிச்சிட்டுச் சாப்பிடு" என்றொரு வார்த்தை.
   அவளுக்குப் பிரயாண கலைப்பு இருந்தாலும்.. அனைவரிடமும் பேசவேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. முக்கியமாகத் தன் கணவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. சாப்பிடும் பொழுது கமலாவிடம் கேட்டாள்.
   'தம்பி பெங்களூர் போயிருக்கு. நீ வரப்போறதா சேகர் டெலிபோன்ல சொன்னான். அநேகமா இன்னிக்கி இல்லன்னா நாளைக்கி வந்துடும்." கமலாவின் பேச்சில் சுரத்தை இல்லை. எழுதி வைத்துப் படிப்பது போல் தான் இருந்தது.
   சேகர் வந்தான். 'எப்டி இருக்கிற மீனா..?" நண்பர்கள் அனைவரும் அவளை பெயர்விட்டுத்தான் கூப்பிட வேண்டும் என்பது அவளது கட்டளை!
   'ம்.. இருக்கிறேன்."
   'காலையில முக்கியமா வெளிய போவவேண்டி இருந்துச்சி. அதான் ஸ்டேஷனுக்கு வரமுடியல."
   'பரவாயில்ல சேகர்." என்றாள். அவளுக்குத் தெரியும். அவன் வரமுடியவில்லை யென்றாலும் வேற யாரையாவது அனுப்பியிருக்கலாம். அல்லது வண்டியாவது அனுப்பி இருக்கலாம் என்பது.
   'சேகர்.. நம்ப பிரென்ஸயெல்லாம் எப்ப பாக்கலாம்? வீக்கெண்டுக்கு வருவாங்களா..? "
   அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
   'ம்.. வருவாங்க. வர்ற வெள்ளி கெழம ருக்மணிக்கி கல்யாணம். அதுக்கு வருவாங்க."
   'கல்யாணமா அப்போ நிச்சயம் வருவாங்கத்தான். மாப்புள்ள எப்டி இருக்காரு..? கல்யாணக் கல வந்துடுச்சா..?" முகம் முழுவதும் பல்லாகக் கேட்டாள். அவள் கண்முன் சரவணன் வந்து சிரித்தான்.
   'மீனா எனக்கு அவசரமா ஒரு வேல இருக்குது. நா அப்பறமா வந்து பாக்கறேன்;" அவள் கூப்பிடக் கூப்பிடக் காதில் விழாதவனாக வெளியேறினான்.
   மீனா யோசித்துக் கொண்டே வெளியே போகச் செருப்பை அணிந்தாள்.
   'மீனா இப்ப எங்கையும் வெளிய போவ வேணாம்." அகிலாண்டேசுவரி அதிகாரமாகச் சொன்னாள்.
   'ஏன்..? சும்மாத்தானே இருக்கேன். போயி ருக்மணிய பாத்துட்டு வந்துடுறேன்."
   'அதெல்லாம் இப்போ வேணாம். வெயில் தாழ போ. குளிர் தேசத்துல இருந்து வந்திருக்க. அப்புறம் சட்டுன்னு உடம்பு வீணாபோயிடும். உள்ள போயி வேற ஏதாவது வேல இருந்தா பாரு. இல்ல டி வி பாரு." என்றார். இதென்ன அன்பா? அதிகாரமா? புரிந்தது கொள்ள முடியாத உணர்ச்சி அவர் முகத்தில்!
   தொலைக்காட்சியை உயிர்பித்து விட்டு அமர்ந்துவிட்டாள். மேற்கே செல்ல இன்று சூரியனுக்கு மனம் வரவில்லை போலும். புது மனைவியைப் பிரிந்து செல்ல முடியாதக் கணவனைப் போல ஏக்கத்துடன் அனல் மூச்சைக் கக்கிக் கொண்டு மெதுவாகப் போனான்.
   மீனா தெருவில் இறங்கி நடந்தாள். அனல் காற்று முகத்தை எரித்தது. தூரத்தில் ஊர் கிணற்றில் ஒரு பெண் தண்ணீர் மொண்டு கொண்டிருந்தாள். அவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.. ஆமாம். அவளே தான்! ராதிகா. லட்சுமணனின் மனைவி. என்ன இங்க இருக்கிறள்..? அம்மா வீட்டிற்கு வந்திருப்பாளோ..? இருக்கலாம்.
   மீனாவைப் பார்த்துவிட்ட ராதிகா.. அவசர அவசரமாகக் குடத்தை நிரப்பிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.
   ஏன் இப்படி..? என்று யோசிக்கும் பொழுதே தண்ணீர் எடுக்க மூன்று பெண்கள் குடத்துடன் வர.. அதில் ஒருத்தி ருக்மணி! மீனா ருக்மணியைப் பார்த்து புன்னகைத்தாள்.
   ருக்மணியும் சிரித்தாள். ஆனால் அதில் நிறையச் சோகம் ஒட்டியிருந்தது. ருக்மணியின் கையைப் பிடித்து அருகில் நிற்க வைத்தாள். ருக்மணி குனிந்து கொண்டாள்.
   'என்ன கல்யாண பொண்ணு.. வெக்கமா..? என்ன எத்தன முற கேலி பண்ணியிருக்கிற? இப்போ என்னோட நேரம்! சொல்லு. மாப்ள எப்டி இருக்கார்? இப்பவாவது  பேசறது உண்டா? இல்ல மொதோ மாதிரியே கண்ஜாட மட்டுந்தானா..?"
   'ப்ச்சு.. அதெல்லாம் ஒன்னும் கெடையாது மீனா.." குரல் மெதுவாக வந்தது.
   'ஏன்.. விரதமா..? கல்யாணம் ஆவுற வரைக்கும் பாக்கக்கூடாது. பேசக் கூடாதுன்னு நேந்துகிட்டியா..?" கன்னத்தில் குத்தினாள்.
   'நேந்துகிட்டா மட்டும் நெனச்சதெல்லாம் கெடச்சிடுதா..? எதுக்குமே குடுப்பன வேணும் மீனா. நா கொடுத்து வக்காதவ. இப்போதைக்கி அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்."
   அவளுடன் வந்த பெண்கள் நிரப்பிவைத்த குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு நடந்தாள்.

   மீனா யோசனையில் முழ்கினாள். என்ன இப்படி பேசுகிறாள்? ஒரு சமயம் மாப்பிள்ளை அவள் விரும்பின சரவணன் இல்லையா..? வேற யாராவதா..? இருக்க முடியாது. அவர்கள் இருவரும் விரும்பியது ஊரறிந்த ரகசியம். சரவணனும் ருக்மணியை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டான். இருக்காது. அவர்களுக்குள் சண்டை என்று வந்தால் கூட அவர்களை இணைத்து வைக்கம் பொறுப்பு சக்திவேலிடம் இருக்கிறது. ஏன்..? மாதவன் ருக்மணியின் அண்ணன் தான். அவனுக்கும் அவன் தங்கை சரவணனை விரும்பியது தெரிந்து தான் இருந்தது.
   எப்படி பார்த்தாலும் மாப்பிள்ளை சரவணனைத் தவிர வேற யாராவது இருக்க முடியாது. சரவணனும் ஏமார்ந்தவன் கிடையாது. ஏதாவது இருவருக்கும் ஊடலாக இருக்கும். ஊடல் இல்லாத காதலா..?
   'அம்மா மீனாச்சி.. தம்பி வந்திடுச்சி. உன்னைய வூட்டுக்கு வரச்சொன்னாரு.."
   ஓர் ஆள் மீனாவிடம் கத்திச் சொல்லிவிட்டுச் சென்றார். இவளுக்குச் சட்டென்று உடல் சிலிர்த்தது. எழுந்து ஆவலுடன் வீட்டை நோக்கி ஓடினாள். அவன் தனிமையில் இருப்பான்.. அவனிடம் முதலில் என்ன பேசுவது..? எதைக் கேட்பது..? மனம் படபடப்பாக அடித்து கொண்டது.
   சக்திவேல் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான். அவனருகில் சேகர் இன்னும் இரண்டு ஊர்க்காரர்கள்! பால் போல் பொங்கிய மனம் நீர்விட்டது போல் அடங்கியது. மீனா அவன் முன் போய் நின்றாள்.
   அவன் பார்வையில் பட்டதும் கண்களில் அதிர்ச்சி. பதியாக இளைத்த உடல். கண்கள் உள்ளே போய் கன்னங்கள் ஒட்டி போய்.. என்ன ஆயிற்று இவருக்கு..?
   'சக்திவேல்.." என்று தொடங்கியவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். 'என்ன இப்படி எலச்சி போயிட்டீங்க..? ஒடம்பு சரியில்லையா..? "
   'இல்ல மீனா.. ஒடம்பு சரியாத்தான் இருக்கு. ஆமா.. நீ எப்டி இருக்க..? எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணியிருக்கியா..? பாஸாயிடுவ இல்ல..?" குரலில் முன்பிருந்தக் கம்பீரம் இல்லை.
   'ம்.. அதெல்லாம் நல்லா பண்ணியிருக்கேன். ஆனா உங்க எல்லாருக்கும் என்ன ஆச்சி..? ஏன் எல்லாரும் டல்லா இருக்கீங்க..?"
   அவன் பதில் தேடுமுன் அவனின் கைபேசி சிணுங்கியது. அநேகமாகப் பெங்களூரிலிருந்து வந்த அழைப்பாக இருக்கும். கன்னடத்தில் பேசினான்.
   மீனா மற்றவர்களைப் பார்த்தாள். அவள் தங்களைப் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் மற்றவர்கள் வேறு எதையோ பார்த்தார்கள்!
   பேசிமுடித்து போனை வைத்தச் சக்திவேல் நிமிர்ந்து அமர்ந்தான். குரலைக் கணைத்துக் கொண்டான்.
   'மீனா.. நீ விரும்பின மாதிறி பி எஸ் சி கம்பியூட்டர் சைன்சு முடிச்சிட்ட. மேல எம் பி ஏ பண்ணு. எங்க பண்ணப்போற? அதே காலேஜுல போதுமா..? வேற காலேஜுல அட்மிஷன் வாங்கட்டுமா..?"
   மீனா அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் பேப்பர் வெய்ட்டை வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தான். மற்றவர்களைப் பார்த்தாள். அவர்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். வந்த கண்ணீரை அவசரப்பட்டுச் சிரமப்பட்டு அடக்கினாள். எழுந்து நின்றாள்.
   'இதோ பாருங்க. நா இங்க இருக்கிறது உங்களுக்கெல்லாம் புடிக்கலன்னா டைரக்டா சொல்லிடுங்க. படிப்ப காரணம் காட்டி என்ன வெலக்கி வைக்கலாம்ன்னு நெனைக்காதீங்க. எம்மேல அன்பு காட்டலன்னாலும் பரவாயில்ல. அன்பாயிருக்கிற மாதிரி நடிக்காதீங்க."
   கண்களில் அவளையும் மீறிவந்த கண்ணீரைத் துடைத்து கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.
   சக்திவேல் இறுக்கம் தளராமல் அமர்ந்திருந்தான்.
   'என்னண்ணா.. அவகிட்ட விசயத்த சொல்லிட வேண்டியது தானே..?" சேகர் கேட்டான்.
   'ஏன்.. காலையில இருந்து நீ இங்க தான இருந்த? நீ சொல்லி இருக்கலாம்ல்ல?"
   அவன் பேசாமல் நின்றான்.
   'சேகர் அவளே தெரிஞ்சிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டும். இந்த விசயத்த தெரியப் படுத்துற தைரியம் எனக்குக் கெடையாது. அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்."
   குரல் உடைந்து வந்தது.

                            (தொடரும்)

Monday 18 February 2013

போகப் போகத் தெரியும் - 39





 
   நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வெள்ளி நிலவாக மீனா.. முற்பகல் சூரியன் இதைப்பார்த்ததும் தவறாக வந்து விட்டோமோ என்ற சந்தேகத்தில் மேகங்களில் மறைந்தான்.
   மீனா பட்டுப்புடவை சரசரக்கத் தங்க நகைகள் ஜொலிஜொலிக்கப் பலவித பூக்களைத் தலை கொள்ள முடியாத அளவுக்குச் சுமந்து கொண்டு துலக்கிவைத்த குத்துவிளக்காகப் பிரகாசித்தாள். சுமங்கலி பெண்கள் அவளுக்கு தாலிக்கயிற்றை மாற்றித் தங்கச் சரடு போட்டு விட்டார்கள்.
   விருந்து சமைக்கும் மனம் ஊரெங்கும் பரவி இருந்தது. சக்திவேல் அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாகக் கூடத்தில் தோழிகளுடன் அமர்ந்து கொண்டிருந்த மீனாவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஆசையுடன் கவலையும் கலந்திருந்தது.
   'எதுக்கு இனிமே இப்டி திருட்டுத்தனமா பாக்கணும்? நேரா போய்ப் பேச வேண்டியது தான..?" மாதவன் சொல்லச் சக்திவேல் சிரித்துக் கொண்டான். மாதவனே எழுந்து மீனாவிடம் வந்தான்.
   'மீனா.. சக்திவேல் அண்ணன் ஒங்கூடக் கொஞ்சம் பேசணுமாம். வா.." என்றான்.
   மீனா தோழிகள் கேலியாகப் பார்த்துச் சிரிக்கவும் அதைப் பெரிசு படுத்தாமல் எழுந்து வந்தாள். வெற்றிலையின் காம்பைக் கிள்ளி ஈரத்தை புடவையில் தேய்த்துக் கொண்டே அகிலாண்டேசுவரியும் இவள் போவதைப் பார்த்தாள்.
   'கூப்டீங்களா..?"
   'ஆமா. உங்கூடக் கொஞ்சம் பேசணும். சாப்பாட்டு வேல முடிஞ்சதும் மாடிக்கு வா." என்றான்.
   'பேசணுமா..?" அவள் மெதுவாகக் கேட்க அவன் தலையாட்டினான். திரும்பி மாமியாரைப் பார்த்தாள். அவர் வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டிருந்தாள்.
   'இந்தாங்க.. உங்க புள்ள எங்கிட்ட எதுவோ பேசணுமாம். என்ன மா..டி." அவள் சத்தமாகச் சொல்லி முடிப்பதற்குள் சக்திவேல் அவள் வாயில் கை வைத்து அழுத்தி மூடினான். மாதவன் தலையில் கையை வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.
   மாமியார் எழுந்து வந்தார்.
   'இன்னாப்பா சக்தி.. இந்த அழகிகிட்ட பேசணுமா..? பேசேன். யார் வேணான்னது. மாடிக்கி கூட்டிக்கினு போய்ப் பேசு. தோட்டத்துக்கு இட்டுக்கினு போய்ப் பேசு. நம்ம ஊரு கோயிலுக்குக் கூட்டிக்கினு போ. ஒன்ன யாரு தடுக்கறது?  ஆனா பேச்சி மட்டும் தான். மத்ததெல்லாம் அப்பறம் தான்." என்றாள் வாயில் வெற்றிலையை மென்று கொண்டே..
   மீனாவைச் சக்திவேல் சிரித்துக் கொண்டே பார்க்க அவள் குனிந்தவள் நிமிரவேயில்லை.
   'ஆசயா கூட்டதுக்கு.. ஊர கூட்டுறாளாக்கும்." மருமகளின் கன்னத்தில் இலேசாகக் குத்தினாள்.
   'அம்மா.. நீங்க வெற வெளையாடாதீங்க. அவ படிக்கறதுக்கு வெளிநாடு ஏதாவது போறாளா..? இல்ல உள்நாட்டுலயே படிக்கிறாளா..ன்னு கெக்கறதுக்குத்தான் கூட்டேன்." என்றான் சாதாரணமாக.
   'என்ன..?" மீனா நிமிர்ந்து பார்த்தாள்.
   'ஆமா மீனா.. உம்படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷம் இருக்குதே.. இனிமேல நீ இங்க எங்கையும் படிக்க முடியாது. பேசாம தூரமா போனத்தான் நல்லது. தேனப்பன் சாதாரண ஆள் கெடையாது. அவங்கிட்ட நீ தனியா ஆப்ட.. உன்ன என்ன வெணுமின்னாலும் பண்ணுவான். நீ இப்போ கண்கணாம இருந்தா கொஞ்சம் கொஞ்சமா கோவம் அடங்கும். நம்ம பசங்களுக்கும் படிப்பு பிரச்சன இல்லாம முடியும்." என்றான். மீனாவின் முகத்தைப் பார்க்காமலேயே.
   'முடியாது. நா போவ மாட்டேன். எனக்கு இப்போத்தான் புதுசுபுதுசா ஒறவெல்லாம் கெடச்சிது. இவங்கள எல்லாம் உட்டுட்டு நா போவ மாட்டன். தேனப்பன் என்ன என்னவேணா பண்ணட்டும். நா உங்களயெல்லாம் உட்டுட்டு போவ மாட்டேன்." அழுவாதக் குறையாகச் சொன்னாள்.
   'வேணாம் மீனா.. புடிவாதம் புடிக்காத. நீ இங்க இருந்தா பிரச்சன பெரிசாகுமே தவர கொறையாது. புரிஞ்சிக்கோ. எங்களுக்கு மட்டும் உன்ன பிரிஞ்சிருக்கணும்ன்னு ஆசையாவா இருக்கு..? உன்னோட பிரண்சும் இதத்தான் சொல்லுறாங்க."
   நிமிர்ந்து அவர்களைப் பார்த்தாள். அவர்கள் எதுவும் பதில் பேசவில்லை. மௌனம் சம்மதமா..? சில நேரங்களில் இல்லை என்பதை சொல்வதற்குப் பயந்து கூட மௌனமாக இருக்கிறார்களே..!
   'ஆமாம்பா.. இவள அதுமாதிரி எங்கையாவது அனுப்பு. நானும் ரெண்டு வரஷத்துக்கு பயமில்லாம இருப்பேன்."
   இப்படி சொன்ன அகிலாண்டேசுவரியை முறைத்தாள். அவரின் கவலை அவருக்கு!
   'சொல்லுமா.. எங்க போற..?" சக்திவேல் அவசரப்பட்டான்.
   'ம்.. செத்தப்பிறகு எந்தச் சுடுகாட்டுல எரிச்சா பொணத்துக்கு தெரியவா போவுது..? இல்ல வலிக்கத்தான் போவுதா..? இது உங்க விருப்பம் தானே.. எது சரியோ அது மாதிரி செய்யிங்க. எனக்குச் சொந்த பந்தங்களோட இருக்கற பாக்கியமே இல்ல போல."
   கண்ணீருடன் உள்ளே போனவளை மற்றவர்கள் கவலையுடன் பார்த்தார்கள்.
   நாளையச் சந்தோசத்துக்காக இன்றைய இன்பங்களை இழப்பது சரியா..?  காயைப் பறித்து உண்பதைவிடக் கனிந்தபின் சுவைப்பது இன்பம் தானே!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   இந்தியாவின் முகத்தில் பொட்டு வைத்தது போல் தலைநகர் டெல்லி!
   எவ்வளவுப் பெரிய நெடுஞ்சாலைகள். எத்தனைப் பெரிய உயர்ந்த மாடி கட்டிடங்கள். இந்தியா கேட். பாராளுமன்றம். வெள்ளை மாளிகை. உச்ச நீதி மன்றம். இன்னும் எத்தனை எத்தனை பெரிய பெரிய விசயங்கள் உள்ளன!
   எத்தனை முறை சினிமாவிலும் தொலைக் காட்சியிலும் பார்த்து ரசித்திருக்கிறாள்! ஆனால் இங்கிருந்த இந்த ஒன்னரை வருடத்தில்.. ஒரு முறைக் கூட இவள் நேரில் சென்று பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆசையும் வந்ததில்லை.
  ஆவல் கொண்ட மனம் தான் ஏங்கும்! மீனாவிற்கு ஏக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் அது அன்புக்காக ஏங்கிய ஏக்கம்! தன்னைக் காப்பாற்ற அடுத்தவருக்குத் துன்பம் வந்துவிடக் கூடாதே.. என்ற எண்ணத்தில் தலையசைத்ததால் அடுத்த இரண்டாம் நாளே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவசரமாக இரயில் ஏற்றிவிட்டு கிளம்பும் போது திருப்தியுடன் கையசைத்தான் சக்திவேல்.
   இறங்கியதும் ஆஸ்டலிலிருந்தே டாக்சி வந்திருந்தது. வார்டன் அன்புடன் அவளை அழைத்துக் கொண்டு போய் அவள் அறையைக் காட்ட.. பஞ்சாப் கல்கத்தாவிலிருந்து வந்த இரண்டு தோழிகளுடன் சேர்ந்திருக்கும் வாய்ப்பு!
   மொழியும் உடையும் மூவருக்கும் வேறுபட்டாலும் அன்பு கண்களில் இருந்தும் உணர்ச்சி உள்ளத்திலிருந்தும் உண்மையாக வெளிபட்டது.
   பல மொழியாளர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள ஆங்கிலம் பயன் பட்டது. ஆங்கிலம் அயலவருக்குச் சொந்தமானது தான்! ஆனால் இந்தியாவில் அதிய நாட்கள் தங்கிவிட்ட விருந்தாளியாதலால் மற்ற மொழிகளுடன் நட்புறவு கொண்டுவிட்டது.
   நல்ல எண்ணங்களுடன் வளர்ந்துவிட்ட நட்பைப் பிரிக்க முடியாது. ஆனால் குடும்பத்தில் உறவு முக்கியமா நட்பு முக்கியமா..? என்ற நிலை வரும் போது.. ஒதுங்கிக் கொண்டு வெளி ஆதரவு கொடுக்கப் போவது யார்..?
   பஞ்சாப் அர்சனா! காதல் ததும்பும் பார்வையுடன் இருக்கும் இடத்தில் உடலை வைத்துவிட்டு நினைவலையாலே மேகத்தில் மிதப்பவள். கனவில் நிச்சயம் அவளின் காதலன் நரேஷ{ம் இருப்பான். சில நேரங்களில் அவனை நினைத்து கொண்டே தூக்கத்தில் மீனாவைக் கட்டிப்பிடிப்பதும் உண்டு.
   மீனா தலையில் அடித்து கொண்டாலும் அவளின் எண்ணத்தை ரசனையுடன் ரசித்துச் சிரித்துக் கொள்வாள்.
   ஆனால் கல்கத்தாவில் இருந்து வந்த ஷார்மி இவளுக்கு எதிர் பதம்! அர்சனாவின் செய்கைகள் எதுவும் பிடிக்காததால் ஒரு முறை அவளைக் கன்னத்தில் அறைந்துவிட்டாள். அதிலிருந்து அர்ச்சனா ஷார்மி பக்கம் திரும்புவதே இல்லை!
   ஷார்மியுடைய கவனம் முழுவதும் படிப்பது.. படிப்பது..  படிப்பது. இது மட்டும் தான்! தனது தாய் காது கேக்காத வாய் பேசாத ஊனம் உள்ளவள். அவளை எந்தக் காமுகனோ கற்பழித்ததால் வந்து பிறந்துவிட்ட சமுதாயத்தின் பார்வையில் விழுந்த கரை என்று தன்னை நொந்து கொள்வாள்.
   தனது வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றோர்க்கான இல்லத்தில் சேர்ந்து அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே அவளுடைய இலட்சியம்!
   மிகச் சிறந்த இலட்சியமாகப் பட்டது மீனாவிற்கு. மனிதன் அடுத்தவனுக்காக வாழும் பொழுது தெய்வமாகி விடுகிறான். இப்படியான மனிதர்கள் பிறக்கிறார்களா..? அல்லது உருவாக்கப் படுகிறார்களா..?
   ஷார்மி தன் தாயைக் கற்பழித்ததால் சமுதாயத்தின் மீது விழுந்த அவநம்பிக்கையால் தொண்டு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாள். மீனா.. தான் ஓர் அனாதை என்பதால் நமக்கு கிடைக்காத அன்பை நாமாவது பிறருக்குக் கொடுப்போமே என்ற எண்ணத்தில் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள்.
   அப்படியானால்.. உருவாக்கப் படுவது தான் சமூகத்தில் அனைத்துமே!
   தனக்குச் சக்திவேல் கிடைத்தது போல் ஷார்மிக்கும் நல்ல வாழ்க்கைத் துணைவர் கிடைத்துவிட்டால்.. சேவையாவது? தொண்டாவது? கணவனுக்குத் தொண்டு செய்வதே மனைவியின் சேவை என வள்ளுவர் வழியில் போக வேண்டியது தான்!

   தானே யோசித்துத் தானே சிரித்துக் கொள்வாள் மீனா! ஆனால் அவளுக்குச் சிரிப்பு என்பது உதட்டளவில் வருவது தான்! உள்ளத்திலிருந்து வந்து அதிக நாட்களாகி விட்டது.
   துவக்கத்தில் அன்றாடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியச் சக்திவேல்.. பிறகு ஞாயற்றுக் கிழமைகளில் மட்டும் பேசினான். அதிலும் பேசத் துவங்கினால்.. போனை வைக்கவே மனமில்லாமல் பேசுவான். ஆஸ்டல் போன் என்பதால் மற்றவர்கள் பேச காத்திருப்பார்கள். அவளுக்கே சற்றுக் கூச்சமாக இருக்கும்.
   அப்படி பேசியவன் தான்.. அதன் பிறகு மாதம் ஒரு முறை! அதிலும் நல்லா இருக்கியா..? நல்லா படிக்கிறியா..? என்ற இரண்டு மூன்று கேள்விகள் தான். இவளே மற்றவர்களைப் பற்றிக் கேட்டாலும்.. ஆமாம் இல்லை என்ற ஒற்றைச் சொற்களே பதிலாக வரும்.
   பிறகெப்படி சிரிப்பு வரும்? முதலில் அவன் சொன்னதைப் போல படிப்பை முடித்துவிட வேண்டும். அதில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். இந்த எண்ணம் மனத்தில் பச்சைக் குத்திக் கொண்டதால்.. படித்தாள்.. படித்தாள்.
   இதோ இன்றுடன் தேர்வு முடிந்துவிட்டது. தேர்வின் முடிவு அவளுக்கே தெரியும். நிச்சயம் நல்ல மதிப்பென்கள்; கிடைக்கும். இனி இந்த ஊரில் அவளுக்கென்ன வேலை..?
   பெட்டியைக் கட்டிக்கொண்டு தோழிகளிடம் விடைபெற்று கொண்டு உற்சாகத்துடன் ஊர் போய் சேர இரயில் ஏறினாள். ஊரே உற்சாகமாகத் தன்னை வரவேற்கும்! சக்திவேல் தன்னை கண்களாலேயே வரவேற்பான்..!
   திறந்த விழிகளில் கனவுகள் மிதக்க கற்பனை வீதியில் நடந்து சென்றாள்.
   உண்மைப் பாதை கல்லும் முள்ளும் மட்டும் அல்லாமல் நெருப்புத் துண்டுகளும் சிதறிக் கிடக்கிறது என்றறியாமல் சென்றாள்.

                              (தொடரும்)