Tuesday 18 September 2012

போகப் போகத் தெரியும் - 25


    பிற்பகல் மணி இரண்டு.
   சூரியனின் கதிரைக் கருமேக தேவதை தனது காதலால் ஒலியிழுக்கச் செய்துவிடலாம் என நினைத்து வானத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது.
   கறுப்பு தேவதையை அணைக்க முடியாத காதல் கொண்ட சூரியன் ஏக்கப் பெருமூச்சி விட்டதினால் பூமி பகல் பொழுதிலும் குளிர்ந்த காற்றுடன் இதமாக நனைந்தது.
   'மீனா.. ஏதோ காலேஜுல நிகழ்ச்சி இருக்குன்னியே.. போவலையா..?" கமலா கேட்டாள்.
   'இல்ல. ஒடம்பு சரியில்லன்னு நாளைக்கி சொல்லிக்கிறேன்." மீனா கவலையுடன் சொன்னாள்.
   இயலாமை பொய் சொல்லத் தூண்டுகிறது.
   'மீனா.. உன்னைய நம்பி இருக்கவங்கள நீ நம்பிக்க துரோகம் பண்ணலாமா..?"
   'கூடாது தான். ஆனாக்கா எனக்கு வேற வழி தெரியலையே.. என்ன செய்யறதாம்..? நீங்களே சொல்லுங்க பாக்கலாம்?"
   'இந்தா வழி." கையில் இருந்த பிளாஸ்ட்டிக் பையை நீட்டினாள். 'இது சத்திவேல் தம்பி வாங்கினு வந்து தந்துச்சி. போட்டுக்கினு சீக்கிறமா கௌம்பு! அதுவே கூட்டிக்கினு போய் காலேஜுல உடுறேன்னு சொன்னுச்சி." என்றாள்.
   மீனா சட்டென்று வாங்கிக் கொண்டாள். மனம் மலர்ந்ததை முகம் காட்டிக் கொடுத்தது. தனது அறையினுள் சென்றவள் பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.
   அவள் அணிந்திருந்த இரத்தச் சிகப்பு நிறத்தில் முத்துக்களும் வெள்ளி சரிகைகளும் மினுக்குகளும் வைத்துப் பதித்துதைத்த ஆடை அவளைத் தேவலோகப் பெண்ணே கண்முன் தோன்றியது போல் இருந்தது. அதிலும் அதனுடன் அவள் அணிந்திருந்த அணிகளங்கள்; சேர்ந்து அவள் அழகுக்கு மேலும் அழகூட்டியது.
   கமலா அவள் அழகை ரசித்துப் பார்த்தாள்.
   ஆனால் சக்திவேல்..!
   அவன் தன் கண்களைச் சற்று நேரம் இமைக்கவே மறந்துவிட்டான். சீதையைக் கண்ட இராமனைப் போல் அவளைக் கண்களாலேயே விழுங்கிவிட்டான்! அவ்வளவு ஆர்வம் கலந்த பார்வை அவன் கண்களில்!
   அகிலாண்டேசுவரி மீனாவைப் பார்த்ததைவிட தன் மகனைத்தான் முறைத்தாள். சக்திவேல் தன் தாயைப் பார்த்தால் தானே..? அவன் தான் மீனாவின் அழகில் மெய்மறந்து போய் இருக்கிறானே..
   அவன் இந்த உடையை வாங்கிய பொழுது  அது இவ்வளவு அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை போலும்..
   எப்பொழுது தன்னுடைவைகள் அழகானது என்று ஒருவன் மற்றவர்கள் சொல்லாமல் உணருகிறானோ.. அவன் அப்பொழுது தான் அதன் மதிப்பை அறிந்து பெருமிதம் கொள்கிறான்.
   'சக்திவேல்.. மணியாவுது. சீக்கிரமா போயி உட்டுட்டு வா.." அதிகாரம் கலந்த அகிலாண்டேசுவரியின் குரல்!
   சக்திவேல் சுயநினைவுக்கு வந்து தலையாட்டினான்.

  ²²²   ²²²    ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   இரவு. பெண்ணின் புருவம் போன்ற வளைந்த பிறை மழைநீர் தேங்கிய குட்டையில் விழுந்து கிடந்தது.
   கல்லூரி நிகழ்ச்சி முடிந்து தானே வந்துவிடுவதாகச் சொன்ன மீனா இன்னும் வரவில்லை.
   பள்ளிக்கூட வாசலில் தன் நண்பர்களுடன் இருந்த சக்திவேல் சந்தேகத்துடன் வழியை நோக்கி இருந்தான். அன்றைய நிகழ்ச்சிக்கு வெற்றிவேல் வந்திருந்தான். ஆனால் வேந்தனோ லட்சுமணனையோ அங்கே பார்க்கவில்லை.  அதனால் சந்தேகம் வலுக்கப் போய் பார்த்துவிட்டு வருவது என்று கிளம்பினான்.
   அப்பொழுது தான் கவனித்தான்! சற்று தூரத்தில் ஓர் உருவம்.. வெளிச்சத்தை விட்டுவிட்டு இருட்டைத் தேடித்தேடிச் சற்று ஒளிந்து ஒளிந்து சென்றது.
   அது மீனா தான்! சக்திவேல் கன்டுபிடித்துவிட்டான். அவனைத் தாண்டிப் போக இருந்தவளை  'மீனா.." கூப்பிட்டான்.
   அவள் நின்றாள். ஆனால் அருகில் வரவில்லை.
   'மீனா இங்க வா.." திரும்பவும் கூப்பிட்டான்.
   'என்ன விசயம்?" குரல் உடைந்த மீனா அருகில் வராமலேயே கேட்டாள்.
   'கொஞ்சம் பேசணும்.." சொல்லிக் கொண்டே சந்தேகத்துடன் அருகே போனான்.
   'இல்ல.. நாளைக்கி பேசலாம்.. எனக்கு எனக்கு.." அதற்கு மேல் அழுகையை அடக்க முடியாதவள் கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஓடினாள்.
   அவளின் சராரா உடையில் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தாலும் கிழிந்து தொங்கிய ஜாக்கெட் முழு முதுகையும் விளக்கு வெளிச்சத்தில் காட்டி மறைந்தது. சக்திவேல் யோசனையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   அழுது கொண்டே ஓடிவந்தவள் தனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் புகுந்து கதவைத் தாளிட்டு கொண்டாள்.
   அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வெளிவந்தது. சற்று நேரம் அழுதவள் ஓய்ந்தாள்.
   அழுகையும் சில சமயங்களில் ஆறுதல் அளிக்கிறது. பொழிந்துவிட்ட மேகம் வெறுமையாக இருக்கும்! அழுது விட்ட மனமும் வெறுமையாகி வேதாந்தம் போதிக்கிறது.
   அவளை இப்படி அழவைத்த வேந்தனை நினைத்தாள். என்ன மனிதன் இவன்? அவனால் எப்படி இன்று இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்ள முடிந்தது.;..?
   பேரூந்தைவிட்டு இறங்கி நடந்தவளை வாய் பொத்தி தூக்கிக் கொண்டு போய்.. எப்படியான தகாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான்! மீனா கோபத்தில் திருப்பித் திட்ட எத்தனை முறை கன்னங்களில் அறைந்தான்? அடித்தாலும் பரவாயில்லை!
   உடம்பில் ஒரு ஒட்டுதுணியையும் விட்டு வைக்காமல் அவிழ்த்து எறிந்துவிட்டு சொன்னான்.  'ஒன்ஒடம்ப முழுசா துணியே இல்லாம பாத்துட்டன். இப்போ நீ பாதி கற்பு எழந்தவ. நாளைக்கி யவனையும் உன்னால கட்டிக்க முடியாது. இப்ப நா நெனச்சாக்கூட ஒன்ன சின்னா பின்னமாக்கிட முடியும்;;. ஆனா அப்டி செய்ய மாட்டேன். ஏன்னா.. நீ இன்னா சொன்ன..? தாலிகட்டுன பொண்டாட்டிய தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல? தாலிய கட்டிட்டு தொடறன். இப்ப நீ எனக்குப் பாதிப் பொண்டாட்டி.. போடி போ. போயி யாருகிட்டவேணா சொல்லிக்கோ. எனக்குக் கவலையே இல்ல. எவன் வர்றான்னு நானும் பாக்கறன். அந்தச் சத்திவேலு அந்த ஆறு பையனுங்க தான.. வரட்டும். அவனுங்கள வெட்டி சாகடிகாம என் உசிறு போவாதுடி. வக்கிறன் அவனுங்களுக்கு வேட்டு. மோதரம் போடுறானா அவன்? அவன் கைய வெட்றன் மொதல்ல. போ. போயி எல்லாத்தையும் சொல்லு."
   வெறியுடன் கத்தினான். மீனா கையில் கிடைத்த துணியை சுற்றிகொண்டு இறக்கை இழந்த பறவையாக நடந்தாள்.
  


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   'நேத்து என்ன நடந்துச்சி..?"
   கல்லூரிக்குக் கிளம்பினவளை நிறுத்திக் கேட்டான் சக்திவேல். கையில் சிவப்பு நிற துப்பட்டா இருந்தது.
   'அது ஒன்னுமில்ல. நேத்து வர்ற வழியில காத்துல துப்பட்டா பறந்துடுச்சி. தேடிப்பாத்தன். கெடைக்கில. துப்பட்டா இல்லாம எப்படி வர்றதுன்னு தெரியாம அசிங்க பட்டுக்கினு இருட்டுல பதுங்கி பதுங்கி வந்தேன்."
    கூசாமல் பொய் சொன்னாள். ஏற்கனவே யோசித்து வைத்தது தான்;! ஆனால் இவன் கையில் எப்படி வந்தது இந்தத் துப்பட்டா..?
   'அப்படீன்னா.. நீ உண்மைய எப்பவுமே சொல்ல மாட்டேயில்ல..?"
   கோபம் வார்த்தையில் தெரிந்தது.
   'இது தாங்க உண்ம."
   அவன் பெருமூச்சி விட்டான். 'மீனா.. பிரச்சனைங்க வரக்கூடாதுன்னு நீ பிரச்சனைகள மூடி மறைக்கப் பாக்குற. ஆனா முடியாது. அது ஒரு நாளைக்கி வெடிச்சிக்கினு வெளிய வரும் போது ரொம்ப ஆபத்துல கொண்டு போய்விட்டுடும். ஞாபகம் வச்சிக்கோ. எங்கிட்ட சொல்லலன்னாலும் பரவாயில்ல. ஆனா ஜாக்கறதையா இருந்துக்கோ. இனிமே வெளிச்சத்தோட வீட்டுக்கு வந்துடு. இல்லன்னா நாங்க யாராவது வர்றோம்." என்றான்.

    அவளும் சனிக்கிழமை பகல் பொழுதிலேயே வந்துவிட்டாள். இவளுக்காக அறிவழகி வந்து காத்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று முழுவதும் அன்னையின் மடியிலேயே படுத்திருந்தாள். சக்திவேல் வெளியூர் போயிருந்தான்.
   மீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று!
   மீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று! அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.
   மூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.                             

                                  (தொடரும்)

3 comments :