Wednesday 4 July 2012

போகப் போகத் தெரியும் - 15


 மணி எட்டடிக்கச் சில நிமிடங்கள்!
   மீனா கோபத்துடன் அந்தக் கூடத்தைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மனம் ஒரு நிலையில் இல்லை. வரப் போகும் ஆபத்தை முதலில் சக்திவேலிடம் சொல்லிவிட வேண்டும். இன்னும் அவரைக் காணோமே.....!
   மேலும் பத்து நிமிடங்கள் கரைய சேகர் வந்து சொன்னான்.
   'மீனா அண்ணனைப் பாக்கணும்ன்னு சொன்னியாமே..... உன்னை கூப்பிடுறார்." என்றான்.
   எங்க?" அவலாகக் கேட்டாள்.
   'பொது விசயம்ன்னா ஆபிஸ் ரூமுலத்தான் பேசுவார். வா...."
   அவனுடன் சென்றாள். ஏற்கனவே பார்த்த அறைதான் அது!
   அன்று போலவே இன்றும் சக்திவேல் இவளுக்கு முதுகைக் காட்டியபடி! 'உட்காரும்மா" என்றார். அவள் உட்கார்ந்தாள்.
   இரண்டு முறை பேசியிருக்கிறோம்! இப்பொழுதாவது தன்னிடம் முகத்திற்கு நேராகப் பேசலாம் இல்லையா....? கேட்ட மனத்தைப் பெருமூச்சுடன் அடக்கினாள்.
   'சொல்லு மீனா என்ன விசயம்.....?"
   அவர் கேட்கும் பொழுதே சசிதரன் ஒரு இரும்பு அச்சாணியைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்துவிட்டு 'அண்ணே அச்சாணி செஞ்சி வந்திடுச்சி." என்றான்.
   மீனா அந்த அச்சாணியைக் கையில் எடுத்து பார்த்து இலேசாகச் சிரித்தாள். அதில் ஏளனம் இருந்தது.
   'ஏன் மீனா சிரிக்கிற?" சசிதரன் தான் கேட்டான்.
   'உலகம் எவ்வளவோ முன்னேறிடுச்சி. ஒருத்தன ஒருத்தன் வீழ்த்தரத்துக்கு எவ்வளவோ நவீன மாடல் யுத்திங்க வந்துடுச்சி. ஆனா நீங்க இன்னும் பழய மாடல் எதிர்ப்பையே நெனச்சிக்கினு இருக்கீங்க. அதான் சிரிப்பு வந்துச்சி." என்றாள் சிரிப்பு மாறமல்!
   சசிதரன் அவளை யோசனையுடன் பார்த்தான். அவர்கள் அனைவரும் சற்று நேரத்திற்கு முன்புதான் இது குறித்துப் பேசிவிட்டு ஒரு முடிவுக்கும் வராமல் அங்கிருந்து வந்திருந்தார்கள். இந்த விசயம் இவளுக்கு எப்படித் தெரியும்.....?
   அவன் இவளைக் கேள்விக்குறியுடன் நோக்க.. மீனா சக்திவேல் இருந்த இடத்திற்குப் பார்வையைத் திருப்பினாள்.
   'சக்திவேல் நாளைக்கு நடக்க போற மாட்டுவண்டி போட்டியில கலந்துக்க போறிங்களா.....?" கேட்டாள்.
   'ஆமாம்"
   'நீங்க கலந்துக்க வேணாம்."
   'ஏன்....?"
   'அதுல கலந்துக்கினா தோல்வி மட்டும் கெடைக்காது. உங்க உயிருக்கும் ஆபத்து இருக்குது."
   'என்ன சொல்லுற நீ? கொஞ்சம் புரியும்படியா சொல்லு." இப் பொழுது குரலில் சற்று அதிகாரம் கலந்திருந்தது.
   'சொல்றேன். மூனு நாளு முன்னாடி என்னோட பிரண்டோட நாயிக்காக வெட்னரி ஆஸ்பிட்டலுக்குப் போயிருந்தேன். டாக்டருக்காக காத்துகினு இருந்தப்போ... என்பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா ஒரு ஆம்பளையோட கொரல். அந்தாளு கிசுகிசுப்பா ;ஏய் சரியா சொல்லு. இந்த மருந்து தானே.... ;ன்னு ஒருத்தன் கேக்க இன்னோருத்தர் நடுங்குற கொரல்ல ;ஆமாங்க இது தான். இந்த மருந்த நாதான் கொடுத்தன்னு யார்கிட்டேயும் சொல்லிடாதிங்க. என்னோட வேல போயிடும் அப்படீன்னான். உடனே ஒரு போன் அடிக்கிற சத்தம். அவன் அதுல  ;சரிசரி அப்படியே செய்றன். யார் யாருன்னு பேர் சொல்லுங்க. குறிச்சிக்கிறேன் ; ன்னு சொல்லிட்டு அந்த மருந்த ஜன்னல் ஓரமா வச்சிட்டு பேர குறிச்சான். அவன் வெற்றிவேல் சக்திவேல் தமிழன்பன் ஜெயராமன் ஜெகதீசன் அப்படின்னு சொல்லிக்கினே குறிச்சிட்டு  ;சரிசரி ஆறு பேரையும் குறிச்சிட்டேன். நேரா நா மாந்தூருக்குப் போயிடுறேன். நாம மாட்டுவண்டி போட்டியில பாத்துகலாம் ; ன்னு சொல்லிட்டு மருந்த எடுத்துகினு போயிட்டான்.
   நா அப்பவே அந்த மருந்து பேர மனசுல குறிச்சிகினேன். டாக்டர்கிட்ட மருந்து பேரைச்சொல்லி விசாரிச்சேன். அந்த மருந்து மாடு குதிரைக்கி அறுவை சிகிச்சைக்கு போடுற மயக்க மருந்தாம். அத ஊசி வழியா போட்டதும் விலங்குகள் தொடக்கத்துல சுறுசுறுப்பா இருக்குமாம். ஆனா கொஞ்ச நேரம் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாத் தொவண்டு போயிடுமாம். சொன்னார். அதனாலத்தான் நான் மாந்தூருக்கு போனேன். ஆனா அந்த ஆளுங்கள பாக்கமுடியல." கவலையாகச் சொல்லி முடித்தாள்.
   அங்கே சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவருமே இதைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். சக்திவேல் தான் அமைதியைக் கலைத்தான்.
   'ரொம்ப நன்றி மீனா. இந்தத் தகவலைத் தெரிஞ்சிகினு வந்து சரியான நேரத்துல எங்ககிட்ட சொன்னதுக்காக..! ஆமா... கண்மணிய ஒனக்கு எப்படி தெரியும்? "
   'நானும் அவளும் ஒரு கல்சுரல் ப்ரோகிராம்ல சந்திச்ச பழக்கம் தான். நான் ஆசிரமத்துல தங்கிப் படிக்கிறேன்னு மட்டும் அவளுக்குத் தெரியும். ஆமா சக்திவேல்..... எதுக்காக உங்கள விரும்புன கண்மணிய கைவிட்டீங்க? ஊர் நல்லதுக்காகவா.....? இல்ல.... அந்த வெற்றிவேலுக்கு பயந்தா.....?"
   கோபமாகவே கேட்டாள். அவள் வீட்டிற்கு வந்ததும் கண்மணி சொன்னதையும் அங்கே நடந்ததையும் குறித்து நிறைய யோசித்துக் கண்மணிக்காக நிச்சயம் இதைச் சக்திவேலுவிடம் கேட்க வேண்டும் என மனத்தில் கணக்குப் போட்டு இருந்தாள்.
   ஆனால் சக்திவேல் உடனே பதில் சொல்லவில்லை. சற்று நேரம் கழித்து மெதுவாகச் சொன்னான்.
   'மீனா..... நான் கண்மணியை விரும்பலை. அது தான் உண்மையான காரணம்;." என்றான்.
   இந்தப் பதிலை அவள் மனம் ஏற்கவில்லை.
   'ஏன் அவளுக்கு அழகில்லையா....? படிப்பில்லையா....? பணம் சொத்து இல்லையா...? சொந்த பந்தமில்லையா....? எதுயில்ல. நீங்க வேணான்னு சொல்லுறதுக்கு? இதுக்கும் அவ உங்களுக்குச் சொந்தம் வேற. உங்க ஜாதகப்படி அமையிற எல்லா தகுதியும் அவளுக்கு இருக்கும் போது எதுக்காக அவள வேணாம்ன்னு சொன்னீங்க?"
   மனம் ஆறாமையால் கேட்டாள்.
   அவள் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. கேள்வியில் நியாயம் இருக்க பதிலில் மட்டும் நியாயம் இல்லாமலா போய் விடும்?
   சக்திவேல் தன் பதிலைச் சொன்னான். 'என் மனசுல வேற ஒரு பெண் இருக்கிறாள்" என்று!
   அவனின் இந்தப் பதில் அவளை அதிர்ச்சியுடன் யோசிக்க வைத்தது. அவனின் பதில் அவளுக்கு இரண்டு வகையில் ஏமாற்றத்தைத் தந்தது. அவள் எதுவும் பேசாமல் இருந்ததைக் கவனித்த அவன் பேச்சை மாற்றினான்.
   'மீனா நாளைக்கி போட்டியில என்ன விபரிதம் இருக்குன்னு உன்மூலமா தெரிஞ்சிடுச்சி. நாளைக்கி போட்டியில கலந்து நிச்சயம் நான் தான் ஜெயிப்பேன். அப்படி ஜெயிச்சா நீ எனக்கு என்ன பரிசு தருவே.....?"
   மீனா யோசித்தாள். அவனை நேராகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இன்னும் அதிகமாகத் தான் இருந்தது. அதற்கேற்றார் போல் பதில் சொன்னாள்.
   'நீங்க ஜெயிச்சா உங்க முகத்தப் பாத்து உங்களுக்கு ஒரு மாலை போடுவேன். இது தான் என்னோட பரிசு." என்றாள்.
   'நி;ச்சயம் நிறைவேறும்." என்றான் அவன்.
   தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று எழுந்தவள் திரும்பவும் யோசனையுடன் அமர்ந்தாள்.
   'உங்களுக்கு என்ன விபரீதம் இருக்குன்னு தெரிஞ்ச் போச்சி. ஆனா மத்த அஞ்சி பேரோட கதி.....?"
   கவலையாகக் கேட்டாள்.
   'நீ சொன்ன அந்த நாலுப் போருக்கும் எச்சரிக்கை கொடுத்திடலாம்"
   'ஆனா... அந்த கடைசி ஆளுக்கு..? யாரா இருக்கும்....?"
   'வேற யார்? நம்ம சின்னதம்பி தான்."
   'சின்னதம்பியா.....?"
   அப்பொழுது தான் அவள் கண்கள் சுற்றும் முற்றும் தேடின. அங்கே இருந்த ஏழு ஆண்களில் சின்னதம்பி இல்லை!
   'அப்போ அவருக்கும் சொல்லிடுவீங்க இல்லையா....?"
   'இல்ல. அவனுக்கு சொல்லப் போறது இல்ல. நீங்களும் யாரும் சொல்லாதீங்க." என்றான் கோபமாக.
   'ஏன்.....?" மீனா அதிர்ச்சியாகக் கேட்டாள். சக்திவேல் இப்படி சொல்லுவார் என்று அவள் எதிர் பார்;க்கவில்லை.
   'ஏனா.....? அவன் வரவர என்னோட பேச்சியையே கேக்குறதில்ல. அவன் போக்கே சரியில்ல. எல்லாம் அவனிஷ்டபடித்தான் நடந்துகிறான். ஒங்கிட்டக் கூட மறியாதை இல்லாம நடந்திருக்கிறான். காலையில உன்ன அடிச்சி கையைபுடிச்சி இழுத்து இருக்கான். மதியானம் உன் மேல மஞ்சத்தண்ணிய ஊத்தியிருக்கான். எங்க அவன் என்ன மதிக்கிறான்? ஒருமுற பட்டாத்தான் திருந்துவான். இது தான் சரியான நேரம். படட்டும்."
   அவன் குரலில் கோபத்தின் அழுத்தம் தெரிந்தது.
   மீனா நெற்றியில் புதியதாகப் ப+த்தவியர்வைத் துளிகளைத் துடைத்தாள்.
   'இதயெல்லாம் உங்கக் கிட்ட யார் சொன்னாங்க?" மெதுவாகக் கேட்டாள்.
   'என்ன சுத்தி ஆயிரம் கண்ணுங்க இருக்குது மீனா. இந்த ஊரு மட்டுமில்ல. என்னை சுத்தியிருக்கிற எட்டு கிராமத்துலையும் எனக்கு வேண்டிய கண்கள் இருக்குது. எங்க எது நடந்தாலும் எனக்கு தகவல் வந்திடும். அதுக்கு இன்னைக்கி நீயே ஒரு சாட்சி." என்றான்.
   ஒரு பெரிய அரசனுக்கு ஒற்றர் படை இருக்குமாம். அந்த ஒற்றர் படையில் இன்று தானும் ஒருத்தியாக இருந்திருக்கிறோமே என்று நினைத்து கொண்டு சிரித்தாள். ஆனால் சின்னதம்பியின் நினைவு வந்தது.
   'சக்திவேல் நீங்க அவரை இப்படி தண்டிப்பதுல்ல எனக்கு உடன்பாடு இல்ல." என்றாள் மிக மெதுவாக.
   'அப்படின்னா நீ அவனை விரும்புறியா.....?"
   அவர் சட்டென்று இப்படிக் கேட்பார் என்று அவள் நினைக்கவில்லை. அவளால் உடனே பதிலும் சொல்ல முடியவில்லை. என்ன சொல்லலாம்...? ஆனால் ஏதாவது சொல்லியாக வேண்டும். சொன்னாள்.
   'நான் அவர விரும்பறதும் விரும்பாததும் வேற விசயம். அதுக்காக நீங்க அவர மட்டும் தண்டிக்கிறது நியாயம் இல்லை."
   கோபத்தில் மனத்தில் இருப்பது தானே வார்த்தையில் தவறி வெளியே வரும்! அவளையுமறியாமல் வெளிவந்து விழுந்த வார்த்தைகள்.....!
   'அப்படின்னா.....?" அவர் யோசனையுடன் கேட்டார்.
   'அப்படித்தான்." சொல்லிவிட்டு  அந்த இடத்தைவிட்டு உடனே வெளியேறினாள். அதற்கு மேல் தான் அங்கே இருந்தால் நிச்சயம் ஏதாவது உளறிக் கொட்டிவிடுவோம் என்ற பயம் தான் காரணம்.
    அவள் முகம் சிவக்க ஓடியதும் அங்கே சக்திவேலாக அமர்ந்திருந்தவன் சிரித்து கொண்டே சுழல் நாற்காலியைத் திருப்பினான். அவன் வேறு யாருமில்லை. சாட்சாத் நம்ம சின்னதம்பியே தான்!!!
   'என்னண்ணா... மீனாவ இப்படி கொழப்பிட்டிங்க?"
   மாதவன் கேட்க சக்திவேல் சிரித்தான்.
   'நல்லா கொழம்பட்டும். இந்த கொழப்பம் நாளைக்கி வரைக்கும் தானே....? அது வரையிலும் நல்லா கொழம்பட்டும். மொகத்தையே பாக்காத சக்திவேலை விரும்புறாளாம்...... ஆனா அவளுக்காகவே எல்லாம் செய்யிற அவள விரும்புற சின்னதம்பிய வெறுக்கிறாங்களாம். சின்னதம்பி மேல இருக்கிற காதலை வெளிப்படையா சொல்ல வக்கிறேன் பாருங்க. இன்னைக்கி அவ சின்னதம்பிய நெனச்சி தூங்கவே கூடாது. நிச்சயம் தூங்கவே மாட்டா....." என்றான் சக்திவேல்.
   'பாவம் மீனா.... அவள நிங்க ரொம்ப ஏமாத்துறீங்க."
   'நானா ஏமாத்தினேன்? அவளே ஏமாற்றா. என்னோட தப்புயில்லையே..... சரி நாளைக்கி வரைக்கும் தானே. எனக்கும் அவ மேலமேல ஏமாற்றது புடிக்கல. எப்படியும் அவ சின்னதம்பிய காப்பாத்த ஏதாவது முயற்சி பண்ணுவா. என்னன்னு தான் தெரியல. பாப்போம்....."
   அவன் அதற்கு மேல் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான்.


                         (தொடரும்)

2 comments :